×

கொரோனா வைரஸால் தள்ளாடும் இந்திய சுற்றுலா: முன்பதிவு குறைந்ததால் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தவிப்பு..வருகையும் குறைந்ததால் ரூ.3,500 கோடி இழப்பு!

புதுடெல்லி: சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸால் இந்தியாவில் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் வருகை கணிசமாக குறைந்திருப்பது போன்றே, அயல்நாடு செல்வதற்கான முன்பதிவுகளும் ரத்தாகி வருவதால் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொத்து கொத்தாக மடியும் மக்கள், சீல் வைக்கப்பட்ட நகரங்கள் என கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா நிலைகுலைந்து போயுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக, சுற்றுலாத்துறை கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகள் வரத்து குறைந்தது மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு செல்வதற்கான முன்பதிவுகளும் ரத்தாகி வருகின்றன. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் இருக்கும். ஆனால், அயல்நாடு செல்வதற்கான முன்பதிவு பிப்ரவரி மாதம் அதிகம் இருக்கும். ஆனால், அது தற்போது அடியோடு முடங்கிவிட்டதாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் புலம்புகின்றனர். இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும், தமிழக கோயில்களை பார்வையிடவும் ஆர்வம் காட்டுவார்கள்.

அதேபோல், கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதோடு, கோவாவில் ஜாலியாக பொழுதை கழிப்பதும் உண்டு. ஆனால், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் நிலைமை எப்போது சீராகும் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. 2019ம் ஆண்டு, இந்தியாவுக்கு சுமார் ஒரு கோடியே 60 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதில், சீனர்கள் மட்டும் 3.12% ஆகும். இந்தாண்டு கொரோனா வைரஸால் வெளிநாட்டினர் வருகை குறைந்ததின் காரணமாக இந்திய சுற்றுலா தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சுமார் 3,500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Traveling Tourist Tourist Tourist Tourist Coronavirus ,India , Corona virus, India, tourism, loss
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...